நேபாளத்தின் மூத்த ஊடகவியலாளரும் ஜன ஆஸ்தா (Jana Aastha Weekly) வார இதழின் பிரதம ஆசிரியருமான கிஷோர் ஷ்ரேஸ்தா கைது செய்யப்பட்டதை சார்க் ஊடகவியலாளர் மன்றம் (SJF) கடுமையாகக் கண்டித்துள்ளது.
அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறும் SJF கோரிக்கை விடுத்துள்ளது. 2018ஆம் ஆண்டின் தனியுரிமைச் சட்டத்தை மீறியதாகக் கூறி, காத்மண்டு மாவட்ட பொலிஸ் பிரிவு மற்றும் காத்மண்டு பள்ளத்தாக்கு குற்றப் புலனாய்வு அலுவலகத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளால் ஆகஸ்ட் 12ஆம் திகதி மாலை லலித்பூரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்தி அறிக்கையிடல் நடவடிக்கைகள் தொடர்பில் மூத்த ஆசிரியர் ஒருவர் நேரடியாகக் கைது செய்யப்பட்டிருப்பது தெற்காசியா முழுவதும் ஊடக சுதந்திரம், ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும் என SJF தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட செய்தி அறிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகள் இருந்தால், அவை நேபாள பத்திரிகை மன்றம் போன்ற நிறுவப்பட்ட ஒழுங்குமுறை நிறுவனங்கள் ஊடாக அல்லது சிவில் சட்ட நடவடிக்கைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் எனவும் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஊடகவியலாளர்களைத் தடுத்து வைக்க சட்ட அமுலாக்கல் பொறிமுறைகளைப் பயன்படுத்துவது சுயாதீன ஊடகங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், பொதுநலன் சார்ந்த புலனாய்வு ஊடகவியலையும் பாதிக்கும் என SJF சுட்டிக்காட்டியுள்ளது.
ஊடக சுதந்திரம் சார்க் பிராந்தியம் முழுவதும் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூணாக விளங்குவதாகத் தெரிவித்துள்ள SJF, சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க செயற்படுமாறு நேபாள அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கிஷோர் ஷ்ரேஸ்தாவை உடனடியாக விடுதலை செய்தல், ஊடகப் பணியாளர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துதல், முறையான ஒழுங்குமுறை நடைமுறைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் அனைத்து ஊடகப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பான, அச்சுறுத்தலற்ற பணிச்சூழலை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் SJF முன்வைத்துள்ளது.
நேபாள ஊடக சமூகத்துடன் தொடர்ந்து ஒற்றுமையாக இருப்பதுடன், நிலைமையின் முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதாக SJF தலைவர் ராஜு லாமா தெரிவித்துள்ளார்.




