துபாயில் பதுங்கியிருந்த, சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (25) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரால் சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இவர் களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை, கொலை முயற்சி, துப்பாக்கிச் சூடு, கடுமையான காயம் ஏற்படுத்துதல், தீ வைப்புச் சம்பவம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு உதவி மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் சந்தேகநபர் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு ஹங்வெல்ல பொலிஸ் பிரிவில் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய சம்பவம், 2021 ஆம் ஆண்டு நெலுவத்துடுவ பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் லொறிக்கு தீ வைத்தமை மற்றும் வர்த்தகரின் வீட்டிற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை காயப்படுத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் இவர் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், 2022 ஆம் ஆண்டு ஹங்வெல்ல பகுதியில் வீட்டுக்குள் புகுந்து மூவரை வெட்டிக் காயப்படுத்தியமை, அதே ஆண்டு ஹங்வெல்ல பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் உதவி மற்றும் சதித்திட்டம் தீட்டியமை, 2023 ஆம் ஆண்டு பாதுக்க பகுதியில் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் 2024 ஆம் ஆண்டு ஹங்வெல்ல மற்றும் நெலுவத்துடுவ பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடனும் சந்தேகநபர் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு கொஸ்கம பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியமை, கொழும்பு பகுதியில் கைப்பற்றப்பட்ட T-56 துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களை மற்றொருவரிடம் வழங்கியமை, மீகொட பகுதியில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் மீகொட முத்துஹேன வீதியில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவத்தை வழிநடத்தியமை உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் இவர் தேடப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் மேற்கொண்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல், ஏனைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோதமாக ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகிறது.




