ஐந்து வயதான பாலஸ்தீன சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவரது ஆறு உறவினர்கள் 2024ஆம் ஆண்டு காசா பகுதியில் உயிரிழந்த துப்பாக்கிச் சூடு தமது படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை முதன்முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஹிந்த் ரஜப்பை மீட்கச் சென்ற பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த இரு மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலும் குற்றவியல் விசாரணையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த முன்கூட்டிய அறிவுறுத்தல்களுக்கு மாறாக பயணித்த வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
BBC செய்திச் சேவையின் தகவலின்படி, பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் வாகனத்தின் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தவறுகள் காரணமாக, இராணுவப் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஆரம்பத்தில் உயிர் தப்பிய ஹிந்த் ரஜப், பல மணி நேரம் பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கத்தின் தொலைபேசி இயக்குநர்களுடன் தொடர்பில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இஸ்ரேல் இராணுவத்துடன் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னர், யூசுப் அல்-சைனோ மற்றும் அஹ்மத் அல்-மத்ஹூன் ஆகிய இரு மருத்துவ பணியாளர்களை ஏற்றிய ஆம்புலன்ஸ் ஒன்று அவரை மீட்க அனுப்பப்பட்டது. பின்னர் அந்த ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதில் இரு மருத்துவ பணியாளர்களும் உயிரிழந்ததாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
ஹிந்த் ரஜப் மற்றும் அவரது உறவினர்களின் உடல்கள் சில நாட்களுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்டன.
ஹிந்த் ரஜப் உதவி கோரி மேற்கொண்ட உணர்வுபூர்வமான தொலைபேசி அழைப்புகளின் ஒலிப்பதிவுகள் உலகளவில் பரவியதைத் தொடர்ந்து, அவரது கொலை சர்வதேச அளவில் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. அவரது கதை பின்னர் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட “The Voice of Hind Rajab” திரைப்படத்திற்கும் கருப்பொருளாக அமைந்தது.
பிரஸ்ஸல்ஸை தளமாகக் கொண்ட ஹிந்த் ரஜப் அறக்கட்டளை, இஸ்ரேல் இராணுவம் மேற்கொள்ளும் இந்த விசாரணையில் தங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறையின் நம்பகத்தன்மையையும் அந்த அறக்கட்டளை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இஸ்ரேல் பாதுகாப்புப் படை, இஸ்ரேல் மற்றும் சர்வதேச சட்டங்களின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளுக்கு அமைய, மோதல்களுக்கு இடையில் இடம்பெறும் இவ்வாறான தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.




