இந்தியாவின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடு செல்லும் பயணிகளின் போர்டிங் பாஸ்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு கவுன்டர்களில் முத்திரையிடும் நடைமுறை செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் நிரந்தரமாக ரத்து செய்யப்படவுள்ளதாக இந்திய குடிவரவு பணியகம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, பயணிகள் தமது கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள மின்னணு போர்டிங் பாஸ்களைப் பயன்படுத்தி குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும்.
பழைய முத்திரையிடும் நடைமுறையால் ஏற்படும் கால விரயம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் முத்திரை சரியாக பதியாததால் போர்டிங் பாஸ்களை வாசிக்க முடியாமல் ஏற்படும் சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயணி ஒருவர் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸை சமர்ப்பித்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும். எனினும், அதிலும் குடிவரவு அதிகாரிகள் முத்திரையிட மாட்டார்கள்.
இதற்கிடையில், விமான நிலைய வளாகங்களில் பயணிகளை சோதனை செய்யும் போது போர்டிங் பாஸ்களுக்கு முத்திரையிடும் நடைமுறையை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்தியிருந்தது.
மேலும், இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களின் கடவுச்சீட்டுகளில் விமான நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் முத்திரைகளை இடும் நடைமுறையை ரத்து செய்வதற்கான முன்னோடித் திட்டமும் தற்போது நடைமுறையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




