அனுராதபுர முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரின் உத்தியோகபூர்வ அறிக்கை அனுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
B 22424/2026 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் நடைபெறும் இந்த வழக்கு தொடர்பான அறிக்கையின் பிரதியொன்று சட்டமா அதிபருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கையின்படி, சிறுமியால் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் இருந்து நிட்டம்புவ பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மிதியடியின் இருபுறங்களிலும் சந்தேகநபரான தேரருடைய விந்தணுக்கள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மிதியடியில் இரத்தக் கறைகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டு இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் அனுப்பப்பட்ட நீளமான தலைமுடித் துண்டு பாதிக்கப்பட்ட சிறுமியுடையது அல்ல என்றும், அது வேறு ஒரு பெண்ணுடையது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிட்டம்புவ பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையின்படி, சிறுமி ஆவாசக் கட்டிடத்திற்குச் சென்று சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடத்தை பொலிஸாருக்குக் காண்பித்ததுடன், அங்கு தான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகவும் தெரிவித்திருந்தார்.
தற்போது சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்ன தேரர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் உள்ளதுடன், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையும் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
சட்டமா அதிபரின் எதிர்கால அறிவுறுத்தல்களின் அடிப்படையில் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.




