அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி ஒன்றுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் பீச்போர்ட் கடலோர நகரில் கண்டுபிடிக்கப்பட்ட நீண்ட மூக்குடைய சீல் ஒன்றில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடிலெய்ட் நகரிலிருந்து சுமார் 310 கிலோமீற்றர் தெற்கே இந்த விலங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாநில கடற்பரப்பில் வாழும் சுமார் ஒரு இலட்சம் சீல் விலங்குகளைக் கொண்ட கூட்டத்தில் ஒன்றாக இருந்த இந்த விலங்கு, காயங்களுக்கான எந்த அறிகுறிகளும் இன்றி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் மாதம் H5N1 வைரஸ் அவுஸ்திரேலியாவை வந்தடைந்ததைத் தொடர்ந்து அதன் பரவல் அதிகரித்துள்ளது. இடம்பெயரும் கடற்பறவைகளிலிருந்து உள்ளூர் இனங்களுக்கும் வைரஸ் பரவியுள்ளதுடன், இந்த மாத தொடக்கத்தில் பெருமளவில் கடற்பறவைகள் உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
சீல் விலங்குகள் கடற்கரைப் பாறைகளில் பறவைகளுக்கு அருகாமையில் வசிப்பதால் அவை வைரஸால் பாதிக்கப்படும் அதிக ஆபத்தில் இருப்பதாக தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி ஸ்கயே ஃப்ரூன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவில் H5N1 வைரஸ் இதுவரை கோழிப்பண்ணை அல்லது விவசாயத் துறையில் கண்டறியப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி நாடு முழுவதும் 297 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.




