தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் வேறு சேவை வலையமைப்பிற்கு மாறுவதற்கான Mobile Number Portability (MNP) வசதி எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என சில ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன கடந்த 06ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதன் அடிப்படையில் இந்த ஊடகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதம் MNP சேவை ஆரம்பிக்கப்படும் மாதம் அல்ல என்றும், செப்டம்பர் மாத இறுதி என்பது தொடர்புடைய தொலைபேசி நிறுவனங்களுக்கு இடையில் இது தொடர்பான இறுதி இணக்கப்பாட்டை எட்டுவதற்காக வழங்கப்பட்ட காலக்கெடு மட்டுமே என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
செப்டம்பர் மாத இறுதிக்குள் சம்பந்தப்பட்ட தரப்புகள் இணக்கப்பாட்டை எட்டத் தவறினால், இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் உரிம நிபந்தனைகளுக்கு அமைய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் ஒழுங்குமுறை உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
நிறுவனங்களுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படாவிட்டால், நிலையான தொலைபேசி இலக்கப் பெயர்வுத்திறன் (Fixed NP) சேவைக்கு முன்னதாக, அதிகமான வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் கையடக்கத் தொலைபேசி இலக்கப் பெயர்வுத்திறன் (Mobile NP) சேவையை முதலில் ஆரம்பிக்க அரசாங்கம் தலையீடு செய்யும்.
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாத்து, இந்த வசதியை விரைவில் பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும், MNP சேவை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும் சரியான திகதி பின்னர் முறையாக அறிவிக்கப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.




