இலங்கையின் முதலாவது வர்த்தக மட்டத்திலான மின்கல சக்தி சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems – BESS) எதிர்வரும் செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளன.
மின்சார பரிமாற்ற உப நிலையங்கள் 16ஐ அண்மித்த பகுதிகளில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டங்களின் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
அரசாங்க அறிக்கைகளின்படி, குறித்த மின்கல அமைப்புகள் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மூன்று கப்பல் பயணங்கள் மூலம் கொழும்பு துறைமுகம் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அநுராதபுரம் மின்சார பரிமாற்ற உப நிலையத்தை அண்மித்த பகுதியில் தனியார் நிறுவனமொன்றினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் மின்கல சக்தி சேமிப்பு திட்டத்தின் பணிகள் தற்போது சுமார் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
இந்த அமைப்புகள் பகல் நேரங்களில் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரத்தை சேமித்து, இரவு நேரங்களில் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் தேசிய மின்கட்டமைப்பிற்கு மின்சாரத்தை வழங்கும்.
இதன் மூலம் இரவு நேரங்களில் டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை குறைத்து, தேசிய மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவப்படும் ஒவ்வொரு மின்கல சக்தி சேமிப்பு திட்டமும் 10 மெகாவோட் (10 MW) மின்திறனை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கும் திறனைக் கொண்டிருக்கும்.
இந்த அமைப்புகளின் கட்டுப்பாடு மற்றும் முகாமைத்துவப் பணிகளை தேசிய மின்கட்டமைப்பு செயற்பாட்டாளர் (National System Operator Ltd. – NSO) மேற்கொள்ளவுள்ளதுடன், பராமரிப்புப் பணிகளை சம்பந்தப்பட்ட திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ளன.
குறைந்தபட்ச சுற்றுச்சூழல் தாக்கத்துடன் நிலையான மின்சார விநியோகத்தை பேணுவதே இந்தத் திட்டங்களின் பிரதான நோக்கம் எனவும், இதன் பயன் எதிர்காலத்தில் மின்சார பாவனையாளர்களுக்கு கிடைக்கும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நாடளாவிய ரீதியில் மேலும் 23 மின்சார பரிமாற்ற உப நிலையங்களை அண்மித்த பகுதிகளில் இதுபோன்ற மின்கல சக்தி சேமிப்பு அமைப்புகளை நிறுவுவதற்கான கொள்வனவு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




