Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp ஆகிய Meta சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி பாரிய அளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி கப்பம் பெறும் மோசடி தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார் நிலை அணியின் (SLCERT) தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இணையவழி கப்பம் பெறும் மோசடி இந்தியாவில் இருந்து செயற்படுத்தப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையைச் சேர்ந்த பல பயனர்களும் இதற்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SLCERT தெரிவித்துள்ளதன்படி, மோசடியாளர்கள் முதலில் இலக்காகத் தெரிவுசெய்யும் நபரின் நண்பர் பட்டியலை ஆய்வு செய்கின்றனர். பின்னர் அந்த நபரின் சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை அடையாளம் கண்டு, அவர்களின் சமூக ஊடக கணக்குகளைத் தமது நண்பர் பட்டியலில் இணைத்துக்கொள்கின்றனர்.
அதன் பின்னர் Instagram ஊடாக அழகான இளம் பெண்ணின் புகைப்படத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி கணக்கிலிருந்து ‘Hi’ என குறுஞ்செய்தி அனுப்பி இலக்காகக் கொண்ட நபருடன் தொடர்பை ஏற்படுத்துகின்றனர்.
சில நாட்களுக்குப் பின்னர் உரையாடலை மீண்டும் ஆரம்பிக்கும் மோசடியாளர்கள், போலி கணக்கு மூலம் நிர்வாண புகைப்படங்களை அனுப்பி, மறுபுறம் உள்ள நபரையும் அவ்வாறான புகைப்படங்களை அனுப்பவோ அல்லது WhatsApp காணொளி அழைப்புகள் மூலம் தனிப்பட்ட காட்சிகளைப் பகிரவோ தூண்டுகின்றனர்.
பின்னர் அந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை திரைப் பதிவு செய்துகொள்ளும் மோசடியாளர்கள், அவற்றை சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிவிடுவதாக அச்சுறுத்தி பெருமளவு பணத்தை கப்பமாக கோருவதாக SLCERT தெரிவித்துள்ளது.
அடையாளம் தெரியாத கணக்குகள் அல்லது தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகள், நண்பர் கோரிக்கைகள் மற்றும் காணொளி அழைப்புகளுக்கு பதிலளிக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு SLCERT பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அறிமுகமற்ற நபர்களுடன் காணொளி அழைப்புகளின்போது கமராவுக்கு முன்னால் தனிப்பட்ட காட்சிகளைப் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்குமாறும் SLCERT அறிவுறுத்தியுள்ளது.




