அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஓமானுக்கு குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (18) மீண்டும் அதிகரித்துள்ளது.
இதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90 அமெரிக்க டொலர் மட்டத்தைத் தாண்டி 91.24 டொலராக அதிகரித்துள்ளது.
மெர்பன் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 97.70 டொலராகவும், WTI கச்சா எண்ணெயின் விலை 85 டொலராகவும் உயர்ந்துள்ளது.
ஃபொக்ஸ் நியூஸ் ஊடகவியலாளர்களுடன் நேற்று (17) இடம்பெற்ற நேர்காணலின்போது ட்ரம்ப், ஈரானுடன் ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறு ஏற்பட்டால் ஓமானுக்கு குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே தனியான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதேவேளை, அமெரிக்காவும் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலும் உலகளாவிய எண்ணெய் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.




