தீவிர போட்டி நிலவிய தேர்தல் பிரசாரத்தின் பின்னர், தனது வலதுசாரி போட்டியாளரான ஃபிளாவியோ போல்சனாரோவைத் தோற்கடித்து, பிரேசிலின் முக்கிய இடதுசாரித் தலைவரான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது லூலா ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற நான்காவது வெற்றியாகும். அவர் முன்னதாக 2003 ஜனவரி முதல் 2010 டிசம்பர் வரை இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்ததுடன், 2023 ஜனவரி முதல் மீண்டும் அந்தப் பதவியை வகித்து வருகிறார்.
எனினும், நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் அவர் பெற்ற வெற்றி எளிதானதாக இருக்கவில்லை.
கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி நடைபெற்ற முதல் சுற்றில் போல்சனாரோ, லூலாவைத் தோற்கடித்திருந்தார். மூன்று வாரங்களுக்குள் அந்த முடிவை மாற்றியமைக்க லூலாவால் முடியும் எனப் பலரும் நம்பவில்லை.
அதேவேளை, இலத்தீன் அமெரிக்கா முழுவதும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையுடன் மக்கள் வலதுசாரி அரசியலை நோக்கிச் செல்லும் போக்கையும் மாற்றுவதற்கு லூலா முயன்றுள்ளார். தற்போது ஆர்ஜென்டினா, சிலி மற்றும் கொலம்பியா போன்ற முக்கிய நாடுகள் மிதவாத வலதுசாரித் தலைவர்களின் ஆட்சியின் கீழ் உள்ளன.
முதல் சுற்றுத் தோல்விக்குப் பின்னர், பெருமளவிலான மக்கள் பேரணிகள் மற்றும் வலுவான சமூக ஊடகப் பிரசாரங்கள் மூலம் லூலாவின் தேர்தல் பிரசாரம் மீண்டும் வலுப்பெற்றது.
1989ஆம் ஆண்டு முதன்முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட காலத்திலிருந்து பிரேசிலின் இடதுசாரி அரசியலில் முக்கிய நபராகத் திகழும் முன்னாள் உலோகத் தொழிலாளியான லூலா, 2003ஆம் ஆண்டு முதன்முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர் எதிர்கொண்ட மிகக் கடினமான அரசியல் சூழல்களில் ஒன்றை இம்முறை எதிர்கொண்டுள்ளார்.
2027 ஜனவரி 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகக் கூறப்படும் அவரது புதிய பதவிக்காலம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு சவால்கள் நிலவும் சூழலில் தொடங்குகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் எதிர்ப்பும் அவற்றில் அடங்கும்.
கொலம்பியா மற்றும் ஹொண்டுராஸ் தேர்தல்களில் வெற்றிபெற்ற வலதுசாரி வேட்பாளர்களுக்கு ட்ரம்ப் வெளிப்படையாக ஆதரவளித்திருந்தாலும், லூலாவின் எதிராளியான ஃபிளாவியோ போல்சனாரோவுக்கு அவர் நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை. இருப்பினும், 213 மில்லியன் மக்களைக் கொண்ட பிரேசிலில் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு இணக்கமான தலைமை உருவாகுவதை ட்ரம்ப் நிர்வாகம் விரும்பியதாகக் கூறப்படுகிறது.
லத்தீன் அமெரிக்காவை அமெரிக்கா தனது செல்வாக்கு நிலவும் பிராந்தியமாகக் கருதுகிறது. பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் வர்த்தகம் தொடர்பான அமெரிக்கக் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் தலைவர்கள் இப்பிராந்தியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் ட்ரம்ப் நிர்வாகம் ஆர்வமாக உள்ளது.
மேலும், மேற்கு அரைக்கோளத்தில் சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதும் அமெரிக்காவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
எண்ணெய் வளம் நிறைந்ததும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய அரிய மண் கனிம இருப்பைக் கொண்டதாகக் கூறப்படுவதுமான பிரேசில், தென் அமெரிக்காவில் வலதுசாரித் தலைவரால் ஆளப்படாத மிகப்பெரிய நாடாகும். லூலா சீனாவுக்கு நெருக்கமான தலைவராகவும் பெரும்பாலும் கருதப்படுகிறார்.




