அனுராதபுரம், தஹய்யாகம சுற்றுவட்டத்திலிருந்து வீடுகள் 55 பகுதியை நோக்கிச் செல்லும் வீதியில், டி.எஸ். சேனாநாயக்க ஆரம்பப் பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விஜயபுரத்தைச் சேர்ந்த சம்மானி தருணிமா ஏகநாயக்க என்ற 10 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பெண், சிறுமியுடன் தஹய்யாகம சுற்றுவட்டத்திலிருந்து வீடுகள் 55 பகுதியை நோக்கிச் செல்லும் வீதியின் இடதுபுறமாகப் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அந்தச் சந்தர்ப்பத்தில், அனுராதபுரத்திலிருந்து துருவில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் அனுராதபுரம் சாலைக்குச் சொந்தமான பஸ், பின்னால் வந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.




