நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் மேலும் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தற்போது நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் ஊடாக விநாடிக்கு 16,500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் ஊடாக விநாடிக்கு 7,884 கன அடி நீர் களா ஓயாவுக்கு வெளியேற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




