துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி பயணித்த FZ1073 என்ற ஃப்ளைடுபாய் விமானத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு சம்பவத்தின்போது, தனது உயிரைப் பணயம் வைத்து நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்த பிரதான விமானி கப்டன் ஸ்மிட் மச்சார், ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைமைத்துவத்தினால் உயரிய முறையில் பாராட்டப்பட்டுள்ளார்.
துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகம்மத் பின் ராஷித் அல் மக்தூம் அண்மையில் வைத்தியசாலைக்குச் சென்று, தற்போது சிகிச்சை பெற்று வரும் கப்டன் மச்சாரின் நலன் குறித்து கேட்டறிந்துள்ளார்.
இதன்போது துணைப் பிரதமர், கப்டன் மச்சார் மிக உயர்ந்த தைரியம், பொறுப்புணர்வு மற்றும் மனித உயிர்கள் மீதான அளவற்ற அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய சிறந்த விமானி எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒட்டுமொத்த தலைமைத்துவத்தின் மரியாதையும் பாராட்டும் அவருக்கு கிடைப்பதாகவும், இத்தகைய வீரர் ஒருவர் தமது நாட்டின் தேசிய விமான சேவையின் ஒரு அங்கமாக இருப்பது குறித்து முழு நாடும் பெருமை கொள்வதாகவும் ஷேக் ஹம்தான் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி பயணித்த FZ1073 விமானத்தின் விமானி அறையில் வைத்து, உதவி விமானி அவசரகாலங்களில் பயன்படுத்தப்படும் கோடரியால் பிரதான விமானி கப்டன் மச்சாரைத் தாக்கியுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் சட்டமா அதிபரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உதவி விமானி விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி பயங்கரவாதச் செயலில் ஈடுபட முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த போதிலும், கப்டன் மச்சார் விமானி அறையின் கதவைத் திறக்க முடிந்துள்ளது. இதன் மூலம் விமானப் பணியாளர்களும் பயணிகளும் உடனடியாக விமானி அறைக்குள் நுழைந்து தாக்குதலாளியை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் விமானத்தின் கட்டுப்பாடு மீண்டும் பெறப்பட்டு, சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் விமானத்தைப் பாதுகாப்பாக தரையிறக்க முடிந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளதாவது, பிரதான விமானி உள்ளிட்ட விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகள் மேற்கொண்ட விரைவான மற்றும் புத்திசாலித்தனமான நடவடிக்கையினால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தபூக்கில் ஆரம்பகட்ட சிகிச்சை பெற்ற பின்னர், இந்தியப் பிரஜையான கப்டன் மச்சார் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
அபுதாபியிலுள்ள இந்தியத் தூதரகம், அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மிகவும் நல்ல சுகாதார நிலையில் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஐக்கிய அரபு இராச்சியத்தின் விசேட விசாரணைக் குழுவொன்று தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.




