தென் பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள பிஜி தீவுகளில், முக்கிய போதைப்பொருள் வழக்கொன்றின் சாட்சியப் பொருட்களாக நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 40 கிலோகிராம் போதைப்பொருள் திருடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலாக மா வைக்கப்பட்டுள்ளதாகவும் CNN செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 30 மில்லியன் பிஜி டொலர் பெறுமதியான இந்த போதைப்பொருள் தொகை, 2019ஆம் ஆண்டு பிஜி-கனேடிய பிரஜையான ஜோஷுவா ரஹ்மான் தொடர்புடைய சம்பவமொன்றில் கைப்பற்றப்பட்டது. உத்தியோகபூர்வ பதிவுகளின்படி, சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேன்முறையீட்டு விசாரணைகள் நிறைவடையும் வரை பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் தொகை சுவா உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது, 39 போதைப்பொருள் பொதிகளில் 7 காணாமல் போயிருந்தமை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், எஞ்சியிருந்த போதைப்பொருட்களும் போலியானவை என்பதும், கைப்பற்றப்பட்ட அசல் போதைப்பொருள் தொகையில் எதுவும் அங்கு எஞ்சியிருக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த போதைப்பொருள் தொகை 2021 மார்ச் மாதத்தில் உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டதாக பிஜி பொலிஸ் ஆணையாளர் ருசியேட்டே டுட்ராவு தெரிவித்துள்ளதுடன், திருட்டு இடம்பெற்ற சரியான காலம் இதுவரை தெளிவாகவில்லை என்றும் கூறியுள்ளார்.
பாதுகாப்புப் பெட்டகத்திற்குள் செல்ல அனுமதி பெற்றிருந்த நீதித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் டுட்ராவு தெரிவித்ததாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் திருட்டு பிஜியின் நீதித்துறை பாதுகாப்பு தொடர்பில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.




