பெரும்போகத்தை தாமதிக்காமல் முன்கூட்டியே ஆரம்பித்து, ஓரளவு நீரை மீதப்படுத்தி 2027 சிறுபோகத்தையும் மார்ச் 15 அல்லது ஏப்ரல் ஆரம்பத்தில் ஆரம்பித்தால் இரு போகங்களையும் எந்தவித பிரச்சினையும் இன்றி வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என இலங்கை மகாவலி அதிகார சபையின் நீர் முகாமைத்துவ செயலக பணிப்பாளர் பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.
“அத தெரண BIG FOCUS” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
மகாவலி அமைப்புக்கு உட்பட்ட நீர்த்தேக்கங்களில் தற்போது சுமார் 54 சதவீத நீர்கொள்ளளவு காணப்படுவதாகவும், அது குறிப்பிடத்தக்க மட்டம் எனவும் அவர் தெரிவித்தார். வலவே அமைப்பின் நீர்கொள்ளளவு சுமார் 57 சதவீதமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், டிசம்பர் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் வறண்ட வலயத்தில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி கிடைக்காத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, கிடைக்கப்பெறும் நீர்வளத்தை திறமையாக முகாமைத்துவம் செய்து பெரும்போகத்தை முன்கூட்டியே ஆரம்பிப்பதுடன், 2027 சிறுபோகத்தையும் வழக்கமான காலத்திற்கு முன்னதாக ஆரம்பிப்பதன் மூலம் இரு போகங்களையும் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என அவர் வலியுறுத்தினார்.




