மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலை காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதுடன், உலகளாவிய கடல் போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிக பெறுமதியான பொருட்களை கொண்டு செல்வதற்கான மாற்று போக்குவரத்து மையமாக இலங்கை உருவெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு உதாரணமாக, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட 14 லம்போர்கினி சொகுசு கார்கள் இலங்கை ஊடாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் இருந்து கடல் மார்க்கமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்த கார்கள், பின்னர் 40 அடி அளவிலான 7 கொள்கலன்களில் ஏற்றப்பட்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அங்கிருந்து பாரிய சரக்கு விமானம் ஒன்றின் மூலம் அவை ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் மற்றும் கட்டாரின் டோஹா ஆகிய நகரங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான டென்மார்க் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், பிராந்திய அமைதியின்மை காரணமாக பாரம்பரிய வர்த்தகப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையை மாற்று விநியோக வழித்தடமாக பயன்படுத்துவதன் மூலம் நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்த சரக்கில் உள்ள சில கார்கள் சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என்றும், அதிக பெறுமதியான சில மொடல்களின் விலை 500 மில்லியன் ரூபாய் வரை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கார்கள் சில தினங்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. அவற்றை ஏற்றிச் செல்லும் விமானம் ஆகஸ்ட் 21ஆம் திகதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் மற்றும் டோஹா நோக்கி புறப்படவிருந்தது.
இந்நிலையில், இலங்கையின் சரக்கு போக்குவரத்துத் துறைக்கு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் இந்த நடவடிக்கையை செய்தியாக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் எதிர்பாராத தடைகளை எதிர்கொண்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு ஆரம்பத்தில் விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைத்த போதிலும், கட்டுநாயக்க விமான சரக்கு கிராமத்தின் ஏற்றுமதிப் பிரிவில் பணியாற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகள் குறித்த நடவடிக்கையை செய்தியாக்க அனுமதி மறுத்து, ஊடகவியலாளர்களை அங்கிருந்து வெளியேற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மாற்று சரக்கு போக்குவரத்து மையமாக உருவெடுத்து வருவதை உலகிற்கு எடுத்துக்காட்டக்கூடிய இந்த சந்தர்ப்பத்தை ஊடகவியலாளர்கள் செய்தியாக்க அனுமதிக்கப்படாதமை தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும், ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதிலும், அந்தப் பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் தங்களது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி குறித்த சொகுசு கார்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவு செய்துள்ளனர்.




