கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா விழாவின் மூன்றாவது கும்பல் பெரஹரையை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2026.08.20 அன்று நடைபெறவுள்ள மூன்றாவது கும்பல் பெரஹரா மாலை 6.53 மணிக்கு ஸ்ரீ தலதா மாளிகையில் இருந்து ஆரம்பமாகி, தலதா வீதி, டி.எஸ். சேனாநாயக்க வீதி, கொழும்பு வீதி, கொட்டுகொடெல்ல வீதி மற்றும் ராஜ வீதி ஊடாகச் சென்று மீண்டும் ஸ்ரீ தலதா மாளிகையை வந்தடையவுள்ளது.
பெரஹரா செல்லும் பாதையின் மொத்த தூரம் 1.25 கிலோமீற்றர் ஆகும்.
பெரஹரா நடைபெறும் காலப்பகுதியில் வீதித் தடைகள், பாதுகாப்பு கடமைகள், வாகனங்கள் மற்றும் நபர்களைச் சோதனை செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகனத் தரிப்பிடங்களை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கட்டுகஸ்தோட்ட திசையிலிருந்து கண்டி நகருக்குள் வரும் கனரக வாகனங்கள் மஹய்யாவ சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை ஊடாக பொலிஸ் சந்தி வழியாக நகருக்குள் செல்ல முடியும். இலகு வாகனங்களுக்கும் பல மாற்று வீதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தென்னேகும்புர மற்றும் அம்பிட்டிய திசைகளிலிருந்து வரும் வாகனங்கள் சங்கராஜ மாவத்தை, வேல்ஸ் பார்க் சந்தி மற்றும் எஹலேபொல குமாரிஹாமி மாவத்தை ஊடாக பயணிக்க முடியும். கொழும்பு திசையிலிருந்து கண்டி நகருக்குள் வருவதற்கும் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வெளியேறுவதற்கும் வில்லியம் கோபல்லவ மாவத்தை மற்றும் பழைய பேராதனை வீதியை பயன்படுத்த முடியும்.
பெரஹரா நடைபெறும் காலப்பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள போக்குவரத்து திட்டத்துக்கு அமைய செயற்படுமாறு பொலிஸார் சாரதிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.




