கடந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் சுற்றுலா வருமானம் 11.5% வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் 2,031.1 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவான சுற்றுலா வருமானம், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் 1,796.7 மில்லியன் அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.
அத்துடன், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 318.5 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவான சுற்றுலா வருமானம், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 285.5 மில்லியன் அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.
எனினும், இந்த காலப்பகுதியில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பிய வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டு முதல் ஏழு மாதங்களில் 4,435.2 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள், இந்த ஆண்டு அதே காலப்பகுதியில் 8,382.4 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளன.
மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 697.3 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவான வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 777.6 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.




