15ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இத்தாலிய ஓவியரான அன்டொனெல்லோ டா மெஸ்ஸினா (Antonello da Messina) வரைந்த நான்கு ஓவியங்கள் இத்தாலியிலுள்ள அருங்காட்சியகமொன்றில் இருந்து திருடப்பட்டுள்ளன.
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, கடந்த சனிக்கிழமை இரவு அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த திருடர்கள் குழுவொன்றினால் இந்தத் திருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இத்தாலியின் கலாசார பாரம்பரியத்திற்கு ஏற்பட்டுள்ள கடுமையான அதிர்ச்சியாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இத்தாலிய அரசாங்கம் அன்டொனெல்லோ டா மெஸ்ஸினாவின் ஒரு படைப்பை 15 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியிருந்த நிலையில், அது குற்றவாளிகளின் கவனத்தை ஈர்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த அருங்காட்சியகத்தில் பரோக் காலத்தின் புகழ்பெற்ற ஓவியரான கரவாஜியோவின் (Caravaggio) படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திருட்டு தற்செயலாக இடம்பெற்ற ஒன்றல்ல என்றும், குறிப்பிட்ட கலைப்படைப்புகளை இலக்காகக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.




