ரஷ்யாவின் கருங்கடல் கரையோரத்தில் அமைந்துள்ள நோவொரோசிஸ்க் துறைமுகத்தின் மீது உக்ரைன் நடத்தியதாகக் கூறப்படும் பாரிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில், ரஷ்யாவின் இரண்டு முக்கிய தானிய ஏற்றுமதி முனையங்கள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 24 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய கடற்படைத் தளமொன்றை இலக்காகக் கொண்டு ரொக்கெட்டுகள், வான்வழி ட்ரோன்கள் மற்றும் கடற்படை ட்ரோன்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் ரஷ்யாவின் நான்கு போர்க்கப்பல்கள், அவற்றில் இரண்டு ஃபிரிகேட் வகை கப்பல்களும் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் இராணுவம் பின்னர் தெரிவித்துள்ளது. எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் ரஷ்யா இதுவரை உத்தியோகபூர்வ பதிலை வெளியிடவில்லை என BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கருங்கடல் கடற்படைப் படையின் கணிசமான பகுதி நோவொரோசிஸ்க் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக ரஷ்யா கிரிமியாவில் உள்ள செவஸ்டோபோல் தளத்திலிருந்து கப்பல்களை அகற்ற வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலைத் தொடர்ந்து நோவொரோசிஸ்க் நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழாய் அமைப்புகள் சேதமடைந்ததால் நீர் விநியோகமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு முக்கிய தானிய வர்த்தக நிறுவனங்கள் தங்களது முனையங்கள் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக தானியப் போக்குவரத்தை பால்டிக் மற்றும் காஸ்பியன் கடல் துறைமுகங்கள் மற்றும் தரைவழிப் பாதைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை ரஷ்ய விவசாய அமைச்சு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யா உலகின் முக்கிய கோதுமை ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இருப்பதால், கருங்கடல் மற்றும் அசோவ் கடல் பகுதிகளில் இடம்பெறும் தாக்குதல்கள் உலகளாவிய தானிய விநியோகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.




