இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான அழகுக்கலை நிபுணர் ரேணு தாரியால், உலகின் மிக நீளமான கூந்தலைக் கொண்ட உயிருடன் வாழும் பெண் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி நகரில் கின்னஸ் உலக சாதனை அதிகாரிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட அளவீட்டின்போது, அவரது கூந்தலின் நீளம் 8 அடி 11 அங்குலம் அல்லது 2.71 மீற்றர் என பதிவாகியுள்ளது.
இதன்மூலம், உக்ரைனைச் சேர்ந்த அலியா நசிரோவா 8 அடி 5 அங்குல நீளமான கூந்தலுடன் இதுவரை வைத்திருந்த உலக சாதனையை ரேணு முறியடித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு முதல் சுமார் 9 ஆண்டுகளாக தனது தலைமுடியை வெட்டாமல் பராமரித்து வருவதாக ரேணு தெரிவித்துள்ளார்.
“இந்திய கலாசாரத்தில் நீளமான கூந்தல் அழகின் மற்றும் பரம்பரை மரபின் அடையாளமாகக் கருதப்படுகிறது. எனது குடும்பத்தினரும் கலாசார பின்னணியும் இந்த அர்ப்பணிப்பை மேற்கொள்ள எனக்கு பெரும் பலமாக இருந்தன,” என ரேணு தாரியால் தெரிவித்துள்ளார்.
தனது கூந்தலைப் பராமரிப்பதற்காக வாரத்திற்கு ஒருமுறை விசேட இயற்கை எண்ணெய் சிகிச்சையை மேற்கொள்ளும் அவர், தலைமுடியை கழுவி உலர்த்துவதற்காக பல மணிநேரங்களை செலவிடுவதாகவும் கூறியுள்ளார்.
எனினும், உலக வரலாற்றில் இதுவரை பதிவான மிக நீளமான கூந்தலைக் கொண்ட பெண் என்ற சாதனை சீனாவைச் சேர்ந்த ஷீ கியூபிங் என்பவருக்கு சொந்தமானது. அவரது கூந்தலின் நீளம் 18 அடி 5 அங்குலமாக பதிவாகியிருந்தது. அவர் தற்போது உயிருடன் இல்லை.
இதனால், தற்போது உயிருடன் இருக்கும் பெண்களில் உலகின் மிக நீளமான கூந்தலைக் கொண்ட பெண் என்ற கின்னஸ் உலக சாதனையின் உத்தியோகபூர்வ உரிமையாளராக ரேணு தாரியால் பதிவாகியுள்ளார்.




