சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள 27 இடங்களுக்கு இந்தியா வழங்கியுள்ள புதிய பெயர்கள் சட்டவிரோதமானவை மற்றும் செல்லுபடியற்றவை என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனா தனது பகுதியாகக் கருதும் தெற்கு திபெத் பிரதேசத்தை இந்தியா அருணாச்சல் பிரதேசம் என அழைக்கிறது. இந்நிலையில், அந்தப் பிரதேசத்தில் உள்ள 27 இடங்களுக்கு இந்தியா கடந்த 07ஆம் திகதி புதிய பெயர்களை அறிவித்துள்ளது.
குறித்த இடங்களுக்கு வரைபடங்களில் அதிகாரப்பூர்வமாகப் பெயரிடுவதன் மூலம், பொதுமக்களுக்கு அருணாச்சல் பிரதேசம் தொடர்பில் தெளிவான புரிதலை ஏற்படுத்த முடியும் என இந்தியா தெரிவித்துள்ளது.
எனினும், இதுதொடர்பில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் Guo Jiakun 10ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவினால் சட்டவிரோதமாக நிறுவப்பட்டதாக சீனா கருதும் அருணாச்சல் பிரதேசத்தை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த பிரதேசத்தில் உள்ள 27 இடங்களுக்கு இந்தியா வழங்கியுள்ள பெயர்களும் சட்டவிரோதமானவை மற்றும் செல்லுபடியற்றவை என சீனா வலியுறுத்தியுள்ளது.
இந்தியா எந்த நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தெற்கு திபெத் பிரதேசம் சீனாவுக்குச் சொந்தமானது என்ற தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது என சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.




