மிரிஹான பகுதியில் உள்ள தொடர்பாடல் நிலையமொன்றில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டதாக சந்தேகிக்கப்படும் 53 வயதுடைய நபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2026 ஆகஸ்ட் 8ஆம் திகதி காலை, மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டே வீதி பகுதியில் உள்ள தொடர்பாடல் நிலையமொன்றில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிடகோட்டே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் குறித்த தொடர்பாடல் நிலையத்தின் உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றிவளைப்பின்போது போலியாக அச்சிடப்பட்ட 5,000 ரூபா நாணயத்தாள்கள் 7, 1,000 ரூபா நாணயத்தாள்கள் 6 மற்றும் 500 ரூபா நாணயத்தாள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், ஒரு கணினி, ஸ்கேன் இயந்திரம், அச்சுப்பொறி, பென் டிரைவ், பேப்பர் கட்டர் மற்றும் அளவுகோல் ஆகியனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் 2026 ஆகஸ்ட் 9ஆம் திகதி நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




