பூகெட் நகரிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை காலை வானில் ஏற்பட்ட கடுமையான காற்றுக் குழப்பத்தினால் பாதிக்கப்பட்டதில், குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர்.
ஏர்பஸ் A320 வகையைச் சேர்ந்த AI2379 விமானம் திடீரென ஏற்பட்ட கடுமையான காற்றுக் குழப்பத்தினால் சுமார் 300 அடி உயரம் வரை கீழிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் காலை 11.30 மணியளவில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்ற போது விமானத்தில் 134 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் நான்கு விமானப் பணியாளர்களும் அடங்குகின்றனர்.
திடீர் காற்றுக் குழப்பத்தின் போது விமானம் கடுமையாக அசைந்ததால், சீட் பெல்ட் அணியாத சில பயணிகள் மேலே தூக்கி வீசப்பட்டு விமானத்தின் மேற்பகுதி மற்றும் பயணப் பொதிகள் வைக்கும் பகுதிகளில் மோதிக் காயமடைந்துள்ளனர்.
சிறுவர்கள் உட்பட பல பயணிகள் காயமடைந்துள்ளதுடன், இந்த அனுபவம் தங்களுக்கு “மறுபிறவி கிடைத்தது போன்ற உணர்வை” ஏற்படுத்தியதாக சில பயணிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பயணிகள் விமான நிலைய மருத்துவப் பிரிவினரால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சை மற்றும் CT ஸ்கேன்/MRI பரிசோதனைகளுக்காக 7 பேர் வசந்த் குஞ்சில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விசாரணையை ஆரம்பித்துள்ளது.




