முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய சம்பத் மனம்பேரி உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட கொள்ளை வழக்கின் தீர்ப்பு இன்று (13) அறிவிக்கப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நாரஹேன்பிட்டி சந்திக்கு அருகில் பொலிஸ் அதிகாரிகளாகத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, கிழக்கு மாகாணத்திலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற தமிழ் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி, அரிசி ஏற்றப்பட்ட லொறி, பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியைக் கொள்ளையிட்டதாக பிரதிவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சம்பத் மனம்பேரி உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அதன் தீர்ப்பை இன்று (13) அறிவிப்பதற்கு திகதி குறிக்கப்பட்டது.




