2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐந்து மணித்தியாலங்கள் நாடாளுமன்றத்தில் செவிமடுக்கக் கிடைத்தது ஒரு கிளிப்பிள்ளை பட்ஜெட் மட்டுமே எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வறுமையை ஒழிப்பதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் 220 இலட்சம் மக்களும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
வாழ்வாதாரப் போராட்டம், பொருட்களின் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தெளிவான பதில்களை வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதற்கான எந்தவொரு முறையான வேலைத்திட்டமும் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை எனவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.




