அநுராதபுரம் புனித நகரில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஏழு சந்தேகநபர்களையும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புனித பூமிக்குள் தமது எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்ததன் மூலம் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர்கள் ஏழு பேரையும் மனநல மருத்துவப் பரிசோதனைக்கும், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகளுக்கும் உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்ட அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும், கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரியும் ருவன்வெலிசாயவுக்கு அருகில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
கடந்த வியாழக்கிழமை (12) ராஜாங்கனே சத்தாரதன தேரர் உள்ளிட்ட குழுவினர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவானது.
இந்த மோதலில் சத்தாரதன தேரரின் தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து பொலிஸார் தலையிட்டு பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரைக் கைது செய்தனர். சந்தேகநபர்கள் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.




