Facebook சமூக ஊடகம் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள் மற்றும் அவை நடத்தப்படும் இடங்களை அடையாளம் கண்டு கண்காணிப்பதற்காக பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விசேட புலனாய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விருந்துகள் மூலம் இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உள்ளாகுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான F. U. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தெல்தெனிய பொலிஸ் பிரிவில் Facebook ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றை சுற்றிவளைத்து 41 இளைஞர், யுவதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் போதைப்பொருள் வலையமைப்பினர் பணம் ஈட்டும் நடவடிக்கையாக இவ்வாறான விருந்துகளை ஏற்பாடு செய்வதாகவும், Facebook விருந்துகள் என்ற போர்வையில் இளைஞர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்குவதாகவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
தமது பிள்ளைகளின் உரையாடல்கள், நடத்தைகள் மற்றும் அன்றாடப் பயணங்களில் திடீரென ஏற்படும் மாற்றங்கள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் பிரச்சினை காரணமாக 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 175 பேர், 172 ஆண்கள் மற்றும் 3 பெண்கள், தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனை காரணமாக ஏற்பட்ட 11 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




