மார்பகப் புற்றுநோய் காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் மூவர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளர் வைத்தியர் சேனக தலகல தெரிவிக்கையில், வருடாந்தம் 6,000க்கும் அதிகமான மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவாகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் புற்றுநோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வைத்தியர் சேனக தலகல இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில், குறிப்பாக பெண்களிடையே அதிகளவில் காணப்படும் புற்றுநோய் வகையாக மார்பகப் புற்றுநோய் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
வருடாந்தம் 6,000க்கும் அதிகமான மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவாகுவதுடன், 1,000க்கும் அதிகமானோர் இந்த நோய் காரணமாக உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, நாளொன்றுக்கு புதிதாக சுமார் 17 மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவாகுவதுடன், சுமார் மூவர் உயிரிழப்பதாக வைத்தியர் சேனக தலகல தெரிவித்தார்.
நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுதல், நோயாளர்களைத் தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் அவர்களை முறையாகப் பராமரித்தல் ஆகியவை மிகவும் முக்கியமானவை எனவும் அவர் வலியுறுத்தினார்.
எனினும், துரதிர்ஷ்டவசமாக, நோய் அறிகுறிகள் தெளிவாகத் தென்பட்ட போதிலும் பல நோயாளர்கள் தாமதமாகவே மருத்துவமனைகளுக்கு வருவதாகவும், இதனால் சிகிச்சையின் மூலம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வது கடினமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




