முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
பொழுதுபோக்கு

யானைகளுக்கு உணவு வழங்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கதிர்காமம் – புத்தல வீதியில் தங்கியிருக்கும் காட்டு யானைகளுக்கு சட்டவிரோதமாக உணவு வழங்கும் வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. வாகனங்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
யானைகளுக்கு உணவு வழங்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கதிர்காமம் – புத்தல வீதியில் தங்கியிருக்கும் காட்டு யானைகளுக்கு சட்டவிரோதமாக உணவு வழங்கும் வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

வாகனங்களில் இருந்து இறங்கியோ அல்லது வாகனங்களுக்குள் இருந்தோ காட்டு யானைகளுக்கு உணவு வழங்குவதால், அவை வீதியை அண்மித்த பகுதிகளில் தங்குவதற்குப் பழக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக வாகனங்களுக்கு காட்டு யானைகளால் ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது குறித்த வீதியில் சுமார் எட்டு காட்டு யானைகள் வாகனங்களை நிறுத்தி உணவு பெற்றுக்கொள்ளப் பழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யால தேசிய பூங்காவின் 02ஆம் வலயத்திற்கு உட்பட்ட இந்த வீதியில் நாளொன்றுக்கு 2,000க்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன.

கடந்த ஆறு வருடங்களில் இந்த வீதியில் காட்டு யானைகளின் தாக்குதல்களால் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், வருடாந்தம் 100க்கும் அதிகமான வாகனங்கள் சேதமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வனவிலங்குகளுக்கு துன்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக வனவிலங்கு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு முன்வைத்து, காட்டு யானைகளுக்கு உணவு வழங்கும் வாகனங்களை காணொளியாகப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என ஊவா மாகாண வனஜீவராசிகள் உதவிப் பணிப்பாளர் டபிள்யூ. ஏ. இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்