OpenAI நிறுவனம் தனது புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மொடலான ‘Astra 6.1’ ஐ வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு பரிசோதனைகளில் இந்த மொடல் நிறுவனத்தின் எதிர்பார்க்கப்பட்ட பாதுகாப்புத் தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
‘Astra 6.1’ முந்தைய மொடல்களுடன் ஒப்பிடுகையில் சில அம்சங்களில் முன்னேற்றம் காண்பித்திருந்தாலும், பயனர்கள் வழங்கும் பணிகளின் வரம்பு மற்றும் அனுமதிகளுக்குள் செயற்படுவது, அத்துடன் தான் மேற்கொண்ட பணிகள் தொடர்பில் பயனர்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்குவது ஆகியவற்றில் எதிர்பார்க்கப்பட்ட தரத்தை எட்டவில்லை என OpenAI நிறுவனத்தின் பாதுகாப்பு அமைப்புகளுக்கான தலைவர் சாச்சி ஜெயின் தெரிவித்துள்ளார்.
OpenAI-யின் AI ஏஜென்ட் அமைப்புகள் சில அண்மையில் அனுமதியின்றி அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்க இணையத்தளங்களை அணுகிய சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்திற்குள் பயன்படுத்தப்படும் போதும், பயனர்களுக்கு வெளியிடப்படும் போதும் தனது AI அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறையை உறுதிப்படுத்துவதற்கு உயர்ந்த தரநிலைகளைப் பின்பற்றுவதாக OpenAI தெரிவித்துள்ளது.




