2027 முதல் 2029 வரையான காலப்பகுதியில் சூரிய சக்தி, காற்றாலை சக்தி மற்றும் மின்கல சக்தி மூலம் 2,700 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்திறனை மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இன்று (11) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, குறித்த காலப்பகுதியில் சூரிய சக்தி மூலம் 1,392 மெகாவாட், காற்றாலை சக்தி மூலம் 370 மெகாவாட் மற்றும் மின்கல சக்தி மூலம் 1,000 மெகாவாட் மின்திறனை மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த காலத்தில் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்பலகைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சில சந்தர்ப்பங்களில் மின்சார உற்பத்தியில் உபரி ஏற்படுவதாகவும், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் அதிகளவான உபரி மின்சாரம் உருவாகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் மின்சாரக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக சில சந்தர்ப்பங்களில் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
எனினும், மின்கல சக்தி சேமிப்பு முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் பகல் நேரத்தில் அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து, இரவு நேரத்தில் விநியோகிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




