டிட்வா புயலுக்குப் பின்னர் மண் அடுக்குகள் உறுதியற்ற நிலையை அடைந்துள்ள பகுதிகளில் மண்சரிவுகள் மீண்டும் தீவிரமடையும் அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் புவியியலாளர் வசந்த சேனாதீர, காலி மாவட்டத்தின் நாகொட, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட மற்றும் அயகம பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், பதுளை மாவட்டத்தின் எல்ல, கண்டி மாவட்டத்தின் பாததும்பர, மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட், ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மண் அரிப்பு மற்றும் மண் கழுவிச் செல்லும் நிலைமைகளும் ஏற்படக்கூடும் என்பதால், நீருடன் மணல் கலந்து ஓடுவதைக் காணக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகி வரும் குழப்பமான வானிலை நிலைமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கையைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்தார்.
குறித்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கையின் கிழக்குக் கரைக்கு இணையாகப் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறினார். நவம்பர் 13ஆம் திகதிக்குப் பின்னர் மேல், வடமத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இலங்கையில் பொதுவாக ஈரலிப்பான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எல் நினோ நிகழ்வின் தாக்கம் காரணமாக ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை வறட்சியான வானிலை நிலவக்கூடும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றால் வெளியிடப்படும் எச்சரிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சுற்றுலாப் பயணங்களைத் தவிர்ப்பதோடு ஆறுகளில் நீராடுவதையும் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் நாட்டின் அபாயகரமான இடங்களில் நீராடச் சென்றதன் காரணமாக 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.




