மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளதுடன், நேற்று இரவு முதல் அதன் ஆறு (06) வான் கதவுகள் தானியங்கி முறையில் திறக்கப்பட்டுள்ளன.
மகாவலி அதிகாரசபையின் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் வசந்த அஹெலபிட்டிய தெரிவிக்கையில், நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 438.12 மீற்றராக (438.12 MSL) உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, விநாடிக்கு 504 கன மீற்றருக்கும் அதிகமான நீர் மகாவலி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
G1 வான் கதவு 0.731 மீற்றரும், G2 வான் கதவு 0.746 மீற்றரும், G3 வான் கதவு 0.770 மீற்றரும், G4 வான் கதவு 0.708 மீற்றரும், G5 வான் கதவு 0.677 மீற்றரும், G6 வான் கதவு 0.716 மீற்றரும் திறக்கப்பட்டுள்ளன.
எனினும், G7 மற்றும் G8 வான் கதவுகள் இதுவரை திறக்கப்படவில்லை.
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் மகாவலி ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும். எனவே, ஆற்றின் இரு கரைகளிலும் தாழ்நிலப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் மற்றும் மகாவலி ஆற்றைப் பயன்படுத்துவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.




