முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

சுகாதார உதவியாளர்களின் சீருடை விதிகளைத் திருத்தக் கோரிக்கை

தொழில்சார் தரநிலைகளையும் நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதுடன், கலாசார மற்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சுகாதார உதவியாளர்களின் (Health Assistants) தற்போதைய சீருடை விதிமுறைகளை…

By Site Administrator2 நிமிட வாசிப்பு
சுகாதார உதவியாளர்களின் சீருடை விதிகளைத் திருத்தக் கோரிக்கை

தொழில்சார் தரநிலைகளையும் நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதுடன், கலாசார மற்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சுகாதார உதவியாளர்களின் (Health Assistants) தற்போதைய சீருடை விதிமுறைகளை உடனடியாக மீளாய்வு செய்யுமாறு தமிழ் பேசும் மக்களின் அரசியல் மன்றம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த மன்றத்தின் ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்று (17) சுகாதார அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி, குறித்த விதிமுறைகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கியதைத் தொடர்ந்து இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மருத்துவப் பராமரிப்பின் பாதுகாப்பையும் தொழில்சார் தரநிலைகளையும் உயர்ந்த நிலையில் பேணுவதுடன், சட்டபூர்வமான கலாசார மற்றும் மதத் தேவைகளுக்கும் தனிநபர்களின் விருப்பங்களுக்கும் இடமளிக்கும் வகையில் சீருடை விதிமுறைகள் அமைக்கப்பட வேண்டும் என அந்த மன்றம் வலியுறுத்தியுள்ளது.

குறித்த சுற்றறிக்கையை மீளாய்வு செய்து திருத்துவதுடன், அனைத்து அரச சுகாதார நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடிய நடைமுறைக்கு உகந்ததும் அனைவரையும் உள்ளடக்கியதுமான தேசியக் கொள்கையொன்றை உருவாக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் நாடாளுமன்றத்தில் விடுத்த அழைப்பைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த மன்றம், முன்மொழியப்பட்ட குழு உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளதா, அதன் தற்போதைய முன்னேற்றம் என்ன, திருத்தப்பட்ட தேசியச் சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ள காலக்கெடு என்ன என்பன தொடர்பிலும் தெளிவுபடுத்துமாறு கோரியுள்ளது.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் முன்மொழிவுகளை வழங்கவும் நியாயமான தீர்வொன்றுக்கு ஆதரவளிக்கவும் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அந்த மன்றம், தேவையான கொள்கை மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கே உரியது எனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் தேவையற்ற இனப் பதற்றங்கள் உருவாகுவதைத் தவிர்ப்பதற்காக, சுகாதார அமைச்சு உடனடியாகப் பதிலளித்து தெளிவான காலக்கெடுவொன்றை அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC), ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA), இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) ஆகிய ஆறு அரசியல் கட்சிகளின் சார்பில் இக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்