சந்தையில் நிலவும் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முழுமையாகத் தீர்க்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹிரு செய்திப் பிரிவு மேற்கொண்ட விசாரணையின்போது, கடந்த இரண்டு நாட்களாக எரிவாயு விநியோகம் இடம்பெறாமையே இந்தத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று (16) நாட்டை வந்தடைந்துள்ளது. இதனையடுத்து, நேற்று 12.5 கிலோகிராம் நிறையுடைய ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதாக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்றும் (17) அதே அளவிலான ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. நாளை மேலும் 85,000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
அத்துடன், 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் நளிந்த குருகுலசூரிய தெரிவிக்கையில், இம்மாதம் 20 மற்றும் 24 ஆம் திகதிகளில் இரண்டு எரிவாயுக் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 3,800 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும், 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கும் வருகை தரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




