இன்று (08) காலை களுத்துறை, வச்கடுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலாவிற்காக காலி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, மாணவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி வீழ்ந்து, எதிர்த்திசையில் வந்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிக்கிய மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸ் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் களனி பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்று வந்த 21 வயதான சிதும் சங்கல்ப என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளில், உயிரிழந்த மாணவர் மேலும் ஐந்து நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் வீதியின் வலது பக்கமாக சாய்ந்து விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது எதிர்த்திசையில் வந்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பின்புற சக்கரத்தில் அவர் சிக்கியுள்ளார்.
விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், பின்னர் பொலிஸார் தலையிட்டு நிலைமையை சீர்செய்துள்ளனர்.
பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெறும் காட்சி CCTV கமராவிலும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




