கொழும்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகளுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் மேல் மாகாணத்தின் 7 முக்கிய வழித்தடங்களில் 104 புதிய மெட்ரோ பேருந்துகளை சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘மெட்ரோ பஸ்’ நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த புதிய பேருந்து சேவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நாளை (29) ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பை மையமாகக் கொண்ட 7 வழித்தடங்களில் 104 பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் நேர அட்டவணைகளுக்கு அமைவாக தங்களது இலக்குகளை சென்றடையும் வகையில் இச்சேவை திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்களை தினசரி பயணங்களுக்கு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிப்பதன் மூலம் கொழும்பில் நிலவும் கடுமையான வாகன நெரிசலைக் குறைக்க இந்த புதிய பேருந்து சேவை பங்களிக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
புதிய மெட்ரோ பேருந்து வலையமைப்பு கொழும்பையும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய குடியிருப்பு, வர்த்தக மற்றும் போக்குவரத்து மையங்களையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பின்வரும் 7 சேவைகள் இயக்கப்படவுள்ளன:
CM01 – மாகும்புர முதல் புறக்கோட்டை வரை
CM02 – மில்லேனியம் சிட்டி முதல் புறக்கோட்டை வரை
CM03 – மாகும்புர முதல் கடவத்தை வரை
CM04 – தெமட்டகொட முதல் பாணந்துறை வரை
CM05 – பத்தரமுல்லை முதல் ஏக்கல வரை
CM06 – கொள்ளுப்பிட்டி சுற்றுவட்ட சேவை
CM07 – கெஸ்பேவ முதல் புறக்கோட்டை வரை
இந்த வழித்தடங்கள் கொட்டாவ, பத்தரமுல்லை, இராஜகிரிய, பொரளை, மாலபே, கடவத்தை, வத்தளை, தெஹிவளை, மொரட்டுவை, பாணந்துறை மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கின்றன.
கொழும்பு நகருக்குள் தினமும் பெருமளவான தனியார் வாகனங்கள் நுழைவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கு மாற்றாக ஒரே நேரத்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதன் மூலம் தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 7 பேருந்து முன்னுரிமை வழித்தடங்களில் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரையும் மற்ற வாகனங்கள் நுழைவதற்கும் நிறுத்துவதற்கும் தடை விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசரநிலை, விபத்தைத் தவிர்ப்பது, கடுமையான போக்குவரத்து நெரிசலில் அவசியமாகப் பயணிப்பது அல்லது திருப்பம் மேற்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் போன்ற குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே விதிவிலக்கு வழங்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.




