சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 24 வயதான இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசா மற்றும் அவரது மரண தண்டனையை தளர்த்தக் கோரி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் பிபிசி உலகச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் முஹம்மது அவர்களை அவமதிக்கும் வகையில் பேஸ்புக் பதிவொன்றை வெளியிட்டதாகக் கூறி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து அவருக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இலங்கை முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சிவில் அமைப்புகள் பல்வேறு மனுக்களை சமர்ப்பித்து தமது கடும் கவலையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது. அனோஜனுக்கு சட்டரீதியான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான நிவாரணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் அரச நிறுவனங்கள் இராஜதந்திர மட்டத்தில் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதிக்குப் பின்னர் அனோஜனின் நிலைமை தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும், இராஜதந்திர மட்டத்தில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், இது தொடர்பில் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை அரசாங்கம் அவரது குடும்பத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.
சவூதி அதிகாரிகள் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான குறிப்பிட்ட திகதியை இதுவரை அறிவிக்கவில்லை எனவும், தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம் அனோஜனுக்கு ஐந்து வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்திருந்தது. பின்னர் அவரது தண்டனையை குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
சவூதி அரேபிய சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும், சிறை அதிகாரிகளின் கடுமையான கண்காணிப்பு மற்றும் வசதிகளின் கீழ் மட்டுமே தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியும் எனவும் பிபிசி தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளுக்காக சவூதி அரேபியா விதிக்கும் இத்தகைய கடுமையான தண்டனைகள் தொடர்பில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக கவலை மற்றும் எதிர்ப்பை வெளியிட்டு வந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, 2023 ஜூலை மாதத்திலும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான முஹம்மத் அல்-கம்திக்கு சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவுகள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்ததாக பிபிசி மேலும் தெரிவித்துள்ளது.




