போலி தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை வைத்திருந்த நபர் தொடர்பில் கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாக, 2026.10.04 அன்று காலை வெரஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜனதா மாவத்தை பகுதியில் வைத்து போலி தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் போலி தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றுடன் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 49 வயதுடையவரும் சந்தேகநபரான பெண் 43 வயதுடையவரும் ஆவர். இவர்கள் வெரஹெர, ஜனதா மாவத்தை பகுதியில் வசிக்கும் கணவன், மனைவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, சந்தேகநபர்கள் சுமார் ஒன்றரை வருடங்களாக போலி தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து பணத்திற்கு விற்பனை செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




