முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

கிரிக்கெட் வீரரின் சகோதரரை கைது செய்ய நடவடிக்கை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத சொத்துக்களை கையகப்படுத்துதல் அல்லது பணச்சலவை தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், முன்னணி தேசிய மட்ட கிரிக்கெட் வீரர் ஒரு…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
கிரிக்கெட் வீரரின் சகோதரரை கைது செய்ய நடவடிக்கை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத சொத்துக்களை கையகப்படுத்துதல் அல்லது பணச்சலவை தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், முன்னணி தேசிய மட்ட கிரிக்கெட் வீரர் ஒருவரின் 37 வயதுடைய மூத்த சகோதரரை கைது செய்வதற்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக நம்பகமான பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கல்கிசை பகுதியில் வசிக்கும் சந்தேகநபர், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குழுத் தலைவர்கள் பலருடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வன்முறைக் குற்றங்களுக்காக இதற்கு முன்னர் இரண்டு முறை சிறைத்தண்டனை அனுபவித்துள்ள இவர், பின்னர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் திகதி, இரத்மலானை விமான நிலையச் சந்திக்கு அருகிலுள்ள கந்தவல வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகளால் 57 வயதுடைய ஜாதுங்க பிரியந்த என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் சந்தேகநபர் உதவி மற்றும் ஆதரவு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெரோயின், ‘ஐஸ்’, குஷ் மற்றும் ஹஷீஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களைப் போக்குவரத்து செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் சந்தேகநபர் பிரதேசத்தைச் சேர்ந்த நபர்களை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இயங்கும் பல பாதாள உலக போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடன் சந்தேகநபர் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகவும் பொலிஸார் தகவல்களைத் திரட்டியுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தை சலவை செய்வதற்கும் மறைத்து வைப்பதற்குமான நடவடிக்கைகளிலும் சந்தேகநபர் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இலஞ்சம் பெற்றுக்கொண்டு அவருக்கு உதவியதாகக் கூறப்படும் சில ஊழல் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சேகரிக்கப்பட்டுள்ள அனைத்து சாட்சியங்களையும் மேலும் உறுதிப்படுத்திய பின்னர் சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்