கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை அனுமதியுடன் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்காக கொழும்பு 7 பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சந்தேகத்திற்கிடமான காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
குறித்த காணியை கொள்வனவு செய்வதற்காக இருவர் 154 மில்லியன் ரூபாய் வங்கிக் கடனைப் பெற்றிருந்த போதிலும், அவ்வாறான கொள்வனவை மேற்கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு நிதி வசதி இருக்கவில்லை என்பது ஆணைக்குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் குறித்த கடன் தொகையை மீளச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து, வங்கியினால் அந்தக் காணி ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் நிறுவனம் ஒன்றை உருவாக்கியிருந்த அரசியல் தொடர்புகளைக் கொண்ட ஒருவர் அதனைக் கொள்வனவு செய்துள்ளதாகவும் விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆரம்பத்தில் அந்தக் காணியை கொள்வனவு செய்த இருவரும், தாங்கள் ஆவணங்களில் கையொப்பமிட்டது மட்டுமே என விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னர், குறித்த காணி 940 மில்லியன் ரூபாய்க்கு வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் தற்போது வசித்து வருபவர்களின் பட்டியலை இலஞ்ச ஆணைக்குழு பெற்றுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.




