வட மாகாண சுற்றுலாத்துறையில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் வகையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாக்கு நீரிணையில் அமைந்துள்ள ராமர் பாலம் (ஆதாம் பாலம்) தொடர்புடைய எட்டு மணல்திட்டுகளை பார்வையிடுவதற்கான சுற்றுலா படகு சேவை கடந்த வாரம் தலைமன்னாரில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த எட்டு மணல்திட்டுகளை பார்வையிடுவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் தலைமன்னாரில் இருந்து இந்த படகு சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் முன்னோடி பயணம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றதுடன், படகு சேவை திங்கட்கிழமை (28) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்னோடி பயணத்தில் வட மாகாண ஆளுநர் என். வேதநாயகன், மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன், வட மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் டாக்டர் ஜே. விவேகானந்தன் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தப் பயணத்தின்போது குழுவினர் தலைமன்னாரில் இருந்து மூன்றாவது மணல்திட்டு வரை படகில் சென்று, அங்கு இறங்கி அந்தப் பகுதியை ஆய்வு செய்துள்ளனர்.
மணல்திட்டுகள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் அவற்றின் நிலைமை, சுற்றுலாப் பயணிகளை அந்த இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள், அத்துடன் சுற்றுலா நடவடிக்கைகளுக்குத் தேவையான தயார்நிலை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் இதன்போது மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் மன்னார் மாவட்டத்தின் கடல் சார்ந்த சுற்றுலாத்துறையின் வாய்ப்புகள் மேலும் வலுப்பெறுவதுடன், சுற்றுலாத்துறையின் ஊடாக பிரதேச மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் வருமான வழிகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்க விடயமாக அமைந்தது. பாதுகாப்பு அமைச்சிடமிருந்து தேவையான அனுமதியைப் பெறும்போது ஏற்பட்ட நிர்வாகச் சிக்கல்களே இதற்குக் காரணம் என மாகாண சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த படகு சேவை உள்ளூர் மக்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படுமா அல்லது கடல் எல்லைக்கு அப்பால் இந்தியப் பகுதியில் அமைந்துள்ள ராமர் பாலத்தின் முனைப்பகுதியை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என மற்றுமொரு சிரேஷ்ட அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.




