இஸ்லாம் மதத்திற்கும் புனித குர்ஆனுக்கும் அவமதிப்பு ஏற்படும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அவரின் பிணையாளர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
ஞானசார தேரர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருப்பதாக மருத்துவ அறிக்கையொன்றை சமர்ப்பித்த சட்டத்தரணி அசோக வீரசூரிய, இந்த வழக்கை சுருக்கமான முறையில் நிறைவு செய்வதற்காக சட்டமா அதிபரிடம் பிரதிநிதித்துவங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனினும், சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை போதுமானதாக இல்லை என்றும், பிணையாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி, ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.




