2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்திருந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை இலக்காகக் கொண்டு தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்த சதி செய்தமை மற்றும் அதற்கு உதவி, ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 9 பிரதிவாதிகளில் 8 பேர் சிறையிலிருந்து வெளியேறியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
மற்றைய பிரதிவாதி மற்றுமொரு வழக்கு தொடர்பில் தொடர்ந்தும் சிறையில் இருக்க வேண்டிய நிலையில் உள்ளதால், இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் அவரால் சிறையிலிருந்து வெளியேற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (22) வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது, விடுவிக்கப்பட்ட பிரதிவாதிகள் தொடர்பான வேறு வழக்கு நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்து, அவர்களை சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு நீதிபதிகள் குழு சிறைச்சாலைக்கு உத்தரவிட்டிருந்தது.
அத்துடன், அவர்கள் விடுதலை செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆவணங்களையும் கட்டணமின்றி வழங்குமாறும் நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.
தாங்கள் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தி, தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.




