போர்க்காலத்தில் திருகோணமலையில் இரு பெண்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற பெண் சிறு அதிகாரிகள் இருவர் எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பிரதான நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், சந்தேகநபர்களான இருவரையும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
சிலாபம் மற்றும் ஹப்புத்தளை பகுதிகளைச் சேர்ந்த இந்த ஓய்வுபெற்ற அதிகாரிகள் இருவரும் மற்றுமொரு வழக்கு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானபோது கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
2008 மே 13 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் திருகோணமலை பாலையூற்று பகுதியில் வசித்து வந்த சசிகுமார் தேன்மொழி மற்றும் மேரி டெல்சியா ஆகிய இரு பெண்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இருவரும் செயற்பாட்டில் இருந்த காலத்தில், குறித்த இரு பெண்களும் திருகோணமலை கடற்படை முகாமில் ‘Gun Site’ என அழைக்கப்படும் நிலத்தடிப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. அதன் பின்னர் அவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
‘Gun Site’ என்பது திருகோணமலை கடற்படை முகாமுக்குள் அமைந்துள்ள நிலத்தடி தடுப்பு நிலையமாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இடம் சட்டவிரோத தடுப்பு நிலையமாக பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த கடத்தல் மற்றும் காணாமல் போன சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




