அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பயணிகளுக்காக விதிக்கப்பட்டுள்ள வீதி பாதுகாப்பு விதிகளை மீறி, இருக்கைப்பட்டி அணியாமல் பயணிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில், அந்த வாகனத்தில் உள்ள இருக்கைப்பட்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளின் எண்ணிக்கையும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு வாகனத்தின் பின்புற ஆசனத்தில் இரண்டு இருக்கைப்பட்டிகள் மட்டுமே இருந்தால், அந்த ஆசனத்தில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் எனவும் அவர் விளக்கினார்.
பின்புற ஆசனத்தின் நடுப்பகுதியில் இருக்கைப்பட்டி இல்லாத நிலையில் மூன்றாவது பயணி ஒருவர் பயணித்தால், அந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தினார்.




