உலக ஈட்டி எறிதல் சாம்பியனான ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக நட்டஈடு வழங்க துருக்கிய விமான சேவை நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஹங்கேரியில் நடைபெற்ற ‘World Athletics Ultimate Championship’ போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது அவரது ஐந்து ஈட்டிகள் சேதமடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை சிவில் விமான சேவைகள் அதிகார சபை வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இலங்கை அதிகாரிகளும் துருக்கிய விமான சேவை நிறுவனத்தின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.
அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் துருக்கிய விமான சேவை நிறுவனத்தின் பிரதிநிதிகள் தமது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.
சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்குத் தேவையான உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்ளவும், ஏற்பட்ட சேதத்திற்காக ருமேஷ் தரங்கவுக்கு நட்டஈடு வழங்குவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் துருக்கிய விமான சேவை நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.




