கொழும்பு சர்வதேச பட்டம் திருவிழா 2026 எதிர்வரும் ஆகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.
திருவிழாவின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு ஆகஸ்ட் 08 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு வாகனப் பேரணி ஆரம்பமாகவுள்ளது. இந்த பேரணி காலி முகத்திடல் சுற்றுவட்டம், கொள்ளுப்பிட்டி சந்தி, தர்மபால மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், ஆர்.ஏ. டி மெல் மாவத்தை, பம்பலப்பிட்டி சந்தி, பௌத்தாலோக மாவத்தை, தும்முல்லை, ஹோர்டன் பிளேஸ், லிப்டன் சுற்றுவட்டம், டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, ரீகல் சந்தி, லோட்டஸ் வீதி, என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம் மற்றும் துறைமுக நகரம் வழியாக செல்லவுள்ளது.
இதனால் குறித்த வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதால், வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொதுமக்களுக்காக திறந்துவிடப்படும் பட்டம் திருவிழா மற்றும் இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முகாமைத்துவத்திற்காக 300 போக்குவரத்து பொலிஸார் உட்பட சுமார் 1,000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
திருவிழாவிற்கு வருகை தரும் மக்களுக்காக MOD Grounds வாகன தரிப்பிடம், Shangri-La அருகிலுள்ள கார் நிறுத்துமிடம், சைத்திய வீதி, யோர்க் வீதி, லெய்டன் பாஸ்டியன் வீதி, துறைமுக நகர வளாகம், சீ ரோட் வாகன தரிப்பிடம் உள்ளிட்ட இடங்களில் வாகன நிறுத்த வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கட்டண அடிப்படையிலான வாகன நிறுத்த வசதிகளாக Union Place Access Tower Car Park, காமினி சுற்றுவட்டம் அருகிலுள்ள தனியார் வாகன நிறுத்துமிடம், லேக் ஹவுஸ் எதிரிலுள்ள கீழ்தள வாகன நிறுத்துமிடம், Chamas Car Park மற்றும் பழைய Manning Market Car Park ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
திருவிழா காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்காக இந்த அறிவிப்பை பரவலாக வெளியிடுமாறு ஊடக நிறுவனங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



